பி.சந்திரசேகர் 
இந்தியா

25 ஆந்திர எம்.பி.க்களில் 24 பேர் கோடீஸ்வரர்கள்

என். மகேஷ்குமார்

அமராவதி: ஆந்திராவில் புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட 25 எம்.பி.க்களில் 24 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 175 பேரவை தொகுதிகளில் 165 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

இதையொட்டி தெலுங்கு தேசம்கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு வரும் 11-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளார். இதையடுத்து மாநில ஆளுநர் நசீர் அகமதுவை சந்திரபாபு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். மறுநாள் ஜூன் 12-ம் தேதி 4-வது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அமராவதியில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் 21 பேர் (தெலுங்கு தேசம்16, பாஜக 3, ஜனசேனா 2) எம்.பி.ஆகியுள்ளனர். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய அங்கம் வகிக்க உள்ளது. மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற உள்ளது. இதுபோல் தோழமை கட்சியான ஜனசேனாவும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 எம்.பி.க்களில் 24 பேர் கோடீஸ்வரர்கள். இதில் குண்டூர் தெலுங்குதேசம் கட்சி எம்.பி.யான பி.சந்திரசேகருக்கு ரூ. 5,075 கோடி சொத்துகள் உள்ளன. வேமி ரெட்டி பிரபாகர் ரெட்டி, ஸ்ரீபரத் முத்துக்குமுளி ஆகிய தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும், பாஜகவை சேர்ந்த சி.எம் ரமேஷும் முதல் 10 பணக்கார எம்.பி.க்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதேபோன்று, ஜனசேனா கட்சியின் வல்லபனேனி பாலசவுரி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜம்பேட்டை எம்.பி. மிதுன் ரெட்டி உள்ளிட்டோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் 16 எம்.பி.க்களில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 4 எம்.பி.க்களில் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

SCROLL FOR NEXT