புதுடெல்லி: பஞ்சாபின் பொற்கோயில் முன்பாக இன்று (ஜூன் 6) காலிஸ்தான் கோஷங்களுடன், ஆதரவு பதாகைகளும் ஏந்தப்பட்டன. ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ 40-வது ஆண்டு நினைவு நாளில் இந்த அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன.
இந்தியாவிடமிருந்து பிரிந்த பாகிஸ்தானை போல், பஞ்சாபை காலிஸ்தானாக பிரிக்க முயற்சிக்கப்பட்டது. இதை தொடக்கம் முதல் எதிர்க்கும் இந்திய அரசு, காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது. இந்நிலையில், பஞ்சாபில் இன்று ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ 40-வது நினைவுநாள் சட்டவிரோதமாக அனுசரிக்கப்பட்டது. இதையெட்டி, அமிர்தசரஸில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயிலில் பல அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. இக்கோயிலில் கூடிய சில சீக்கியர்கள், காலிஸ்தான் ஆதரவு பதாகைகளை ஏந்தி நின்றனர். இவற்றில், 1984-ன் ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார் நடவடிக்கையில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி பிந்தரன்வாலேவின் படங்களும் காணப்பட்டன.
இந்த 40-வது நினைவுநாளில் பல சீக்கிய அமைப்புகள் பஞ்சாப் முழுவதிலும் மாலையில் கல்ஸா ஊர்வலங்கள் நடத்துவதாகவும் அறிவித்துள்ளன. இதனால், மாநிலம் முழுவதிலும் தீவிரப் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இன்னும் சில சீக்கியர் அமைப்புகள் இன்று பஞ்சாப் பந்த் அறிவிப்பும் வெளியிட்டிருந்தன.
இதன் காரணமாக, பஞ்சாப் அரசு சுமார் 2,000 போலீஸாரின் விடுமுறையை ரத்து செய்து அனைவரையும் பாதுகாப்பு பணியில் அமர்த்தி விட்டது.சமீப காலமாக பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் கிளம்பத் துவங்கி உள்ளன. காலிஸ்தான் ஆதரவாளர்களில் முக்கியமானவரான அம்ரீத் பால் சிங், மக்களவைத் தேர்தலில் கதூர் சாஹிப் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
காலிஸ்தான் ஆதரவு பரவல் காரணமாக, சுமார் 1.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த வருடம் ஏப்ரலில் கைதான அம்ரீத் பால், அசாமின் டிப்ரூகர் சிறையில் அடைபட்டுள்ளார். இதேவகையில், பிரதமராக இருந்த இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்களில் ஒருவரான பியாந்தர் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்ஸாவும் பரீத்கோட் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார்.
ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார் பின்னணி: பஞ்சாபை தனிநாடாக கேட்டுவந்த காலிஸ்தான் தீவிரவாதியான பிந்தரன்வாலே, அமிர்தசரஸின் பொற்கோயிலில் முகாமிட்டிருந்தார். அங்கிருந்தபடி, பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு சவால் விடுத்தும் வந்தார். இவரைப் பிடிக்க பிரதமர் இந்திரா 1984-ல் ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார் எனும் பெயரில் இந்திய ராணுவத்தை பொற்கோயிலுக்குள் அனுப்பினார்.
ஜூன் 1 முதல் 6 வரையிலான ராணுவ நடவடிக்கையில், பிந்தரன்வாலே சுட்டு வீழ்த்தப்பட்டார். இதன் காரணமாக, புனிதமானப் பொற்கோயிலில் பல சேதங்களும் ஏற்பட்டன. அப்போது முதல் ஜூன் 6-ல் நடத்தப்படும் நினைவு நாளில், ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட பலருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதன் 40-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.