ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் சஞ்சனா ஜாதவ். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ராம்ஸ்வரூப் கோலி போட்டியிட்டார். தேர்தலில் 51,983 வாக்குகள் அதிகம் பெற்று சஞ்சனா ஜாதவ் வெற்றி பெற்றார். அவருக்கு வயது 25. நாட்டிலேயே இளம் பெண் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த சஞ்சனா, கடந்த 2019-ம் ஆண்டு மகாராஜ் சுராஜ்மால் பிரிஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதன்பிறகு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் கப்தான் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு ரூ.23 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சஞ்சனா போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ரமேஷ் கெடியிடம் வெறும் 409 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்து பாஜக வேட்பாளரை சஞ்சனா தோற்கடித்துள்ளார்.
ராஜஸ்தானில் 25 தொகுதிகளில் பாஜக 14, காங்கிரஸ் 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆர்எல்பி, பாரதிய அகில் காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு தொகுதிகளை கைப்பற்றி உள்ளன.
பிஹாரில் வெற்றி: பிஹார் மாநிலம் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்தவர் சம்பவி சவுத்ரி, வயது 25. இவர் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சன்னி ஹசாரி போட்டியிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கையின் போது, தொடக்கம் முதலே சம்பவி முன்னிலை வகித்தார். இறுதியில் சன்னி ஹசாரியை விட 1 லட்சத்து 87,251 வாக்குகள் வித்தியாசத்தில் சம்பவி வெற்றி பெற்றார்.
பிஹாரின் தர்பங்கா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாட்டின் மிக இளம் வேட்பாளர் என்று பிரதமர் மோடி கூட சம்பவியைப் பாராட்டினார். பிஹார் கேபினட் அமைச்சர் அசோக் சவுத்ரியின் மகள்தான் சம்பவி. இவரது தாத்தா மகாவீர் சவுத்ரி பிஹாரில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். சமூகவியல் பட்டம் பெற்றவர்.