இந்தியா

மக்களவைத் தேர்தல் 2024: எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக வேட்பாளர் முகேஷ்தலால் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய 542 தொகுதிகளில் பாஜக 240 தொகுதிகளைப் பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆனால், ஆட்சியமைக்கும் அளவுக்கு அந்த கட்சி தனிப்பெரும்பான்மையை (272 தொகுதிகள்) பெறவில்லை. ஆனால், பாஜக கடந்த 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களையும், 2019 தேர்தலில் 303 இடங்களையும் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றது.

இந்த முறை கருத்து கணிப்புகள் பொய்த்துப்போய் குறைவான எண்ணிக்கை பெற்றதையடுத்து பாஜக ஆட்சியமைக்க தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு (16 தொகுதிகள்), நிதிஷ் குமாரின் (12 தொகுதிகள்) ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. ஆனால், இந்த முறை 99 இடங்களில் அந்தக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி 37 இடங்களையும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 29 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

SCROLL FOR NEXT