புதுடெல்லி: மத்தியில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லியில்நேற்று ஆலோசனை நடத்தினர்.
மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்தன. இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமானால் 38 இடங்கள் கூடுதலாக தேவைப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதில், மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸின் (எஸ்பி) சரத் பவார், சுப்ரியா சுலே, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாகஆலோசனை நடத்தினர். மேலும்இண்டியா கூட்டணியின் எதிர்கால செயல்பாடுகள், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுதலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “மோடிக்கு எதிராகவும், அவரது அரசியலின் சாராம்சம் மற்றும் பாணிக்கு எதிராகவும் மக்களின் தீர்ப்பு உறுதியாக அமைந்துள்ளது. இது ஒரு தெளிவான தார்மீக தோல்வி என்பதை தாண்டி, தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு பெரிய அரசியல் இழப்பு ஆகும்.
நமது அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள விழுமியங்கள் மீதும், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதிக்கான பல்வேறு பிரிவுகள் மீதும் தனது அடிப்படை உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்ளும் கட்சிகளை இண்டியா கூட்டணி வரவேற்கிறது” என்றார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
“பாஜகவின் வெறுப்பு அரசியல், ஊழல் மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு நாட்டு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்திய அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலும், வேலை இன்மை,முதலாளித்துவ மனப்பான்மை மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளது.
மோடி தலைமையிலான சர்வாதிகார பாஜக ஆட்சியை எதிர்த்து இண்டியா கூட்டணி தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறினார்.