இந்தியா

சமாஜ்வாதி கட்சியில் அமர் சிங்கை சேர்க்க முலாயம் சகோதரர் ராம் கோபால் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

சமாஜ்வாதி கட்சியில் அமர் சிங்கை மீண்டும் சேர்ப்பதற்கு முலாயம் சிங்கின் சகோதரரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ராம் கோபால் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான செய்தியாளர் களின் கேள்விக்கு ராம் கோபால் கூறும்போது, “அமர் சிங் எங்கள் கட்சியில் இணையப் போவதாக வெளியான தகவல் வெறும் புரளி தான். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவரை மீண்டும் சேர்க்கும் பேச் சுக்கே இடம் இல்லை” என்றார்.

சுமார் 15 ஆண்டுகளாக முலாயம் சிங்குடன் மிகவும் நெருக்கமாக இருந்த அமர்சிங், சமாஜ்வாதி கட்சியில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியிலிருந்து விலகினார். பிறகு தனது நெருங்கிய நண்பரும் அப்போது சமாஜ்வாதி கட்சியின் எம்பியுமாக இருந்த நடிகை ஜெயப்பிரதாவுடன் இணைந்து தனிக்கட்சி தொடங்கினார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் இருவரும் இணைந்தனர். உத்தரப் பிரதேசத்தில் போட்டியிட்ட இவர் கள் படுதோல்வி அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி அமர் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்ட முலாயம் சிங், லக்னோவில் நடைபெற்ற ஜானேஷ்வர் மிஸ்ரா பூங்கா திறப்பு விழாவுக்கு வருமாறு அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அமர் சிங், மீண்டும் சமாஜ்வாதி கட்சியில் சேரத் தயார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

அமர் சிங் மீண்டும் கட்சியில் சேருவதற்கு மற்றொரு மூத்த தலைவரான ஆசம் கானும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT