இந்தியா

வாராணசியில் பின்னடைவுக்குப் பின் மோடி முன்னிலை; வயநாட்டில் ராகுல் முன்னிலை | தேர்தல் முடிவுகள் 2024

செய்திப்பிரிவு

லக்னோ: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் சூழலில் உ.பி.யின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முதல் மூன்று சுற்றுகளில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட 5000 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவை சந்தித்த நிலையில் 4வது சுற்றில் மோடி முன்னிலை பெற்றார்.

தற்போதைய நிலவரப்படி, உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பாஜக வேட்பாளரான பிரதமர் நரேந்திர மோடி 28719 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 28283 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கைவிட 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர்.

இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களைப் பொறுத்த வரையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் முறையே வாரணாசி, வயநாடு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார்.

உ.பி.யில் கடும் போட்டி: உத்தரப்பிரதேசத்தில் தேசிய ஜனநாயக முன்னணிக்கு (என்டிஏ) அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் தலைமைக் கட்சியான பாஜக 33, சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 மற்றும் பிஎஸ்பி ஒரு தொகுதிகள் என முன்னணி பெற்றுள்ளன. அங்கு ஒவ்வொரு சுற்றிலும் கடுமையான போட்டி நிலவுகிறது.

பிரஜ்வல் முன்னிலை: கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா முன்னிலை வகிக்கிறார். பிரஜ்வால் பாலியல் வன்கொடுமை சர்ச்சை வெளியான பின்னர் கர்நாடகாவில் இரண்டாம் கட்ட ம்க்களவைத் தேர்தல் நடந்த நிலையில் அதனால் அங்கு பாஜகவுக்கான வாக்கு சதவீதத்தில் பாதிப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் நிலவரம் என்னவென்பதை இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT