புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த 1-ம் தேதி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பதவி பறிபோக உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 150 மாவட்ட ஆட்சியர்களுடன் பேசியுள்ளார். இது அப்பட்டமான மிரட்டல். பாஜக அவநம்பிக்கையில் இருக்கிறது. மக்களின் விருப்பம் வெற்றிபெறும். ஜூன் 4-ம் தேதி மோடி, அமித் ஷா, பாஜக வெளியேறும். இண்டியா கூட்டணி வெற்றி பெறும். ஆட்சியர்கள் அழுத்தத்துக்கு அடிபணியக்கூடாது. அரசமைப்பு சாசனத்தின்படி செயல்பட வேண்டும். அதிகாரிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த சமூக வலைதள பதிவை சுட்டிக் காட்டி தலைமைத் தேர்தல்ஆணையம் கடந்த 2-ம் தேதிஜெய்ராம் ரமேஷுக்கு கடிதம்அனுப்பியது. அதில், “இதுதொடர்பாக எந்தவொரு ஆட்சியரும்புகார் அளிக்கவில்லை. உங்களதுபுகார் தொடர்பாக ஜூன் 2-ம் தேதி மாலை 7 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரங்களை அளிக்கவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் நேற்று அனுப்பிய பதிலில், “குற்றச்சாட்டு தொடர்பான விவரங்களை அளிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் ஜெய்ராம் ரமேஷுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது அதில், “எந்தவொரு ஆட்சியரும் மிரட்டப்பட்டதாக எங்களிடம் புகார் அளிக்கவில்லை. எனவே நீங்கள் கோரியபடி ஒரு வாரம் காலஅவகாசம் வழங்க முடியாது. ஜூன் 3-ம் தேதி இரவு 7 மணிக்குள் உங்களது புகார் தொடர்பான விவரங்கள், ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் கெடுநேற்று இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. ஆனால் ஜெய்ராம் ரமேஷ் பதில் அளிக்கவில்லை. எனவே தேர்தல் ஆணையம் சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.