புதுடெல்லி: ‘‘தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம், மோடியின் கற்பனை தயாரிப்பு. அது மோடியின் மீடியா கணிப்பு’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மக்களவைக்கு கடைசி கட்டமாக நேற்றுமுன்தினம் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அன்று மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டன. அவற்றில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று கூறும்போது, ‘‘பிரதமர் மோடியின் கற்பனையில் உதித்த தயாரிப்புகள்தான் தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள். அவை எல்லாம் மோடி மீடியாவின் கணிப்புகள். அவை கருத்துக் கணிப்புகளே அல்ல. வெறும் கற்பனை’’ என்று தெரிவித்தார்.
‘இண்டியா’ கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரபல பாடகர் சித்து மூஸ் வாலாவின் ‘‘295’’ என்ற பாடலை மேற்கொள் காட்டினார் ராகுல் காந்தி.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் இண்டியா கூட்டணி கட்சிகள் 182 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு கருத்துக் கணிப்பில் 100 இடங்களுக்கு குறைவாகவே இண்டியா கூட்டணி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.