இந்தியா

யமுனா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டாததால் தேர்தலை புறக்கணித்த ஹரியாணா கிராம மக்கள்

செய்திப்பிரிவு

யமுனா ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாததால் ஹரியாணா மாநில கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஹரியாணா மாநிலம் யமுனாநகர் மாவட்டத்தில் தபு மஜ்ரி கிராமம் உள்ளது.

அம்பாலா மக்களவை தொகுதிக்குட்பட்ட அந்த கிராமத்தின் வழியாக யமுனா ஆறு பாய்கிறது. அப்பகுதியில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் அப்பகுதி மக்கள் மறு கரைக்கு செல்வதற்கு நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.

இதையடுத்து பாலம் கட்டித் தர வேண்டும் என மாநில அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதன் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து கூட்டத்தில், தங்களுடைய நீண்டகால கோரிக்கை நிறைவேறாத காரணத்தால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், ஹரியாணாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், தபு மஜ்ரி கிராம மக்கள் திட்டமிட்டபடி வாக்களிக்க செல்லவில்லை. ஜனநாயக கடமையைச் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் வைத்த கோரிக்கையை நிராகரித்தனர்.

மொத்தம் 550 வாக்காளர்கள் உள்ள நிலையில் 2 பேர் மட்டும் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல, பாலம் கட்டித் தரும் வரை இனி வரும் தேர்தல்களையும் புறக்கணிக்கப் போவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT