புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராண சியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரியங்கா வதேராவும் டிம்பிள் யாதவும் இணைந்து வரும் 25-ம் தேதி பிரச்சாரம் செய்கின்றனர்.
உ.பி.யின் புனித நகரமான வாராணசி எம்.பி.யாக பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கு அவர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். பிரதமர் இம்முறை வாராணசிக்கு இரண்டுமுறை பயணம் செய்து பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி உள்ளார்.
வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமாஜ்வாதி ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் போட்டியிடுகிறார். வாராணசியில் அஜய் ராய்க்கு முதன்முறையாக பிரம்மாண்ட பிரச்சாரம் மே 25-ல் நடைபெற உள்ளது.
இதில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா வதேராவும், சமாஜ்வாதி எம்.பி. டிம்பிள் யாதவும் கலந்து கொள்கின்றனர். இந்த வாகனப் பிரச்சாரம் வாராணசி சாலைகளில் சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக இரு பெண் தலைவர்களும், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் அதன் அருகில் சீர் கோவர்தனில் உள்ள துறவி ரவிதாஸ் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்ய உள்ளனர்.
வாராணசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் முன்பிருக்கும் மதன்மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து இருவரும் பிரச்சாரம் தொடங்குகின்றனர். மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த பிரச்சாரத்தின் இறுதியில், சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். வாகனஊர்வலத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தொண்டர்கள் திரளாகக் கலந்து கொள்கின்றனர்.
வாராணசி தொகுதியில் அதன் தலித், குர்மி, பிராமணர்மற்றும் முஸ்லிம் வாக்காளர்களை குறி வைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதனால், பிரச்சார ஊர்வலம், முஸ்லிம்கள் அதிகம் வாழும் ரிவாரி தலாப், நயா சடக்ஆகிய பகுதிகளையும் கடந்துசெல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
வாராணசியில் கடந்த 13-ம் தேதி பிரதமர் மோடி நடத்திய பிரச்சார ஊர்வலம் சுமார் 5 கி.மீ. தொலைவைக் கடந்தது. இந்நிலையில் இதைவிட அதிகமாக 7 கி.மீ. தொலைவுக்கு செல்லும் வகையில் காங்கிரஸ், சமாஜ்வாதி தலைவர்களின் இந்த ஊர்வலம் திட்டமிடப்பட்டுள்ளது.
13 தொகுதிகளுக்கு.. வாராணசியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) சார்பில் முஸ்லிம் வேட்பாளர் அத்தர் ஜமால் லாரி போட்டியிடுகிறார். ஏழுகட்ட மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் வாராணசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு ஜுன் 1-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2019-ல் இந்த 13 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட பிஎஸ்பி, காஜிபூர் மற்றும் கோசி தொகுதிகளில் வெற்றிபெற்றது.