இந்தியா

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: டெல்லி துணை நிலை ஆளுநர் விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கேஜ்ரிவாலின் மவுனம், பெண்கள் பாதுகாப்பு குறித்த அவரது நிலைப்பாட்டை பறைசாற்றுகிறது என்று டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கூறியுள்ளார்.

ஆம் ஆம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும் டெல்லி மகளிர்ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார்.

அப்போது கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக அவர் புகார் அளித்தார். இதன் பேரில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் முதல்வரின் மவுனம், பெண்கள் பாதுகாப்பு குறித்த அவரது நிலைப்பாட்டை பறைசாற்றுகிறது. மாலிவாலுக்கு நேர்ந்த துயரத்தை அவரது சக எம்.பி.க்கள் ஊடகத் துறையினரிடம் உறுதிப்படுத்தினர். முதல்வர் தனது உதவியாளர் மீதுநடவடிக்கை எடுப்பார் என உறுதிகூறினார். ஆனால் இதற்கு முற்றிலும் மாறான ஒரு நிலைப்பாடு இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு ஆளுநர் சக்சேனா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT