இந்தியா

8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் நடைபெற்ற 5-ம் கட்ட மக்களவை தேர்தலில் 58% வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் நேற்றுநடைபெற்ற 5-ம் கட்ட மக்களவை தேர்தலில் 57.57 சதவீத வாக்குகள் பதிவாகின.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19, 26,மே 7, 13 ஆகிய நாட்களில் 4 கட்ட தேர்தல் ஏற்கெனவே முடிந்த நிலையில், 5-வது கட்டதேர்தல் நேற்று நடைபெற்றது.

உத்தர பிரதேசம் 14, மகாராஷ்டிரா 13, மேற்கு வங்கம் 7,பிஹார், ஒடிசா தலா 5, ஜார்க்கண்ட் 3, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா 1 என மொத்தம் 49 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

இரவு 8 மணி நிலவரப்படி, 5-ம் கட்ட தேர்தலில் 57.57 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் இன்று வெளியாகும் என தெரிகிறது.

மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, அனில் அம்பானி, ஆதித்ய பிர்லா குழும தலைவர் குமாரமங்கலம் பிர்லா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன்,ஷாருக்கான், அமீர் கான், சயீப் அலிகான், ரன்பீர் கபூர், சாரா அலிகான், அம்ரிதா சிங்,கரீனா கபூர், சோனாக்‌ஷி சின்ஹா, பூனம் சின்ஹா, தமன்னா, பாடகர் சங்கர் மகாதேவன் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நேற்று தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கு4 கட்டங்களாக தேர்தல் நடந்துவருகிறது. இதில், 2-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

மக்களவைக்கான 6, 7-ம் கட்ட வாக்குப்பதிவு மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT