புரி: புரி ஜெகந்நாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர்தான் என்று பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஒடிசாவின் புரி மக்களவை தொகுதிக்கான வாக்குப் பதிவு வரும் மே 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு புரியில் இன்று (மே 20) நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக புரி ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
இந்த நிலையில், “புரி ஜெகந்நாதரே பிரதமர் மோடியின் பக்தர்தான்” என்று பாஜக மூத்த தலைவரும், புரி தொகுதி வேட்பாளருமான சம்பித் பத்ரா பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகத்தில் இந்த காணொளியை பகிர்ந்து சம்பித் பத்ரா பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அதே போல, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரும் சம்பித் பத்ராவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தனது பேச்சு சர்ச்சையான நிலையில், தற்போது சம்பித் பத்ரா மன்னிப்புக் கோரியுள்ளார். நவீன் பட்நாயக்கின் எக்ஸ் பதிவின் கீழ் பதிலளித்துள்ள சம்பித் பத்ரா, “நவீன் ஜி வணக்கம்! இன்று பிரதமர் மோடியின் ரோட் ஷோ மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து நான் பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி அளித்துக் கொண்டிருந்தேன். எல்லா இடங்களிலும் பிரதமர் மோடி ஜெகந்நாதரின் தீவிர பக்தர் என்றே சொல்லி வந்தேன். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் தவறுதலாக மாற்றி கூறிவிட்டேன். உங்களுக்கும் இது புரியும் என்று எனக்கு தெரியும்.
ஒன்றும் இல்லாத பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் அனைவருக்குமே சிலநேரங்களில் நாக்கு குளறும். நன்றி” இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.