இந்தியா

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக கபில் சிபல் தேர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க (எஸ்சிபிஏ) தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரதீப் குமார் ராய், ஆதிஷ் சி அகர்வாலா, பிரியா ஹிங்கோரனி மற்றும் வழக்கறிஞர்கள் திருபுராரி ரே, நீரஜ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று கபில் சிபல் வெற்றி பெற்றார். எஸ்சிபிஏ தலைவராக கபில் சிபில் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இது தாராளவாத, மதசார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு கிடைத்த வெற்றி” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் வாழ்த்து: இதுகுறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘‘உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துகள். வழக்கறிஞர்கள் சங்கத்தின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பின் மாண்புகளும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. நீதியையும் மக்களாட்சி விழுமியங்களையும் உயர்த்தி பிடிக்கும் வகையில் கபில்சிபலின் தலைமை அமையும் என நம்புகிறோம்’’ என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT