புதுடெல்லி: இந்திய கடற்படை அதிகாரிகளை பெண்களின் ‘ஹனி டிராப்பில்’ சிக்கவைத்து அவர்களிடம் இருந்து ரகசிய தகவல்களை பெறும் பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதித் திட்டம் தொடர்பான வழக்கில் மும்பையை சேர்ந்த அமான் சலீம் ஷேக் என்பவரை என்ஐஏ கடந்த ஆண்டு நவம்பர் 20-ம் தேதி கைது செய்தது.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அமான் சலீம் ஷேக்குக்கு எதிராக என்ஐஏ நேற்று முன்தினம் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சலீம் ஷேக் மீது என்ஐஏ குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பான வழக்கை என்ஐஏ கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஏற்றுக்கொண்டது. விசாரணையில் உஸ்மான் என்ற பாகிஸ்தான் முகவருக்காக மும்பையில் அமான் சலீக் ஷேக் பணியாற்றி வருவது தெரியவந்தது. உஸ்மான் மட்டுமின்றி பாகிஸ்தானை சேர்ந்த மீர் பாலாஜி கான், ஆல்வென் ஆகியோரிடம் இருந்தும் சலீம் ஷேக் ரகசிய வழியில் பணம் பெற்றுள்ளார். பாகிஸ்தான் முகவர்களின் பணியை முடித்துக் கொடுத்ததற்காக இந்தப் பணம் தரப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் பயன்படுத்தும் சிம் கார்டுகளை ஆக்டிவேஷன் செய்ததில் சலீம் ஷேக் பங்கெடுத்துள்ளார். இந்த வழக்கில் என்ஐஏ கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி மன்மோகன் சுரேந்திர பாண்டா, ஆல்வென் ஆகியோருக்கு எதி ராக துணை குற்றப்பத்திரிகை ஒன்றை என்ஐஏ தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.