இந்தியா

பெண் போலீஸுடன் ஷாருக் கான் நடனம்: எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

செய்திப்பிரிவு

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பெண் போலீஸ் ஒருவரைத் தூக்கிக் கொண்டு பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடனம் ஆடிய சம்பவ‌ம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நேதாஜி உள் விளையாட்டரங்கத்தில் சனிக் கிழமை கொல்கத்தா காவல்துறை யால் 'ஜெய் ஹே' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக் கானுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ரக் ஷா பந்தன் கயிற்றைக் கட்டினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நடன நிகழ்ச்சியின்போது யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் பெண் போலீஸ் ஒருவரை தூக்கிக் கொண்டு ஷாருக் கான் நடன மாடினார். இந்தச் சம்பவம் எதிர்க்கட்சிகளிடையே விமர்சனத் துக்கு உள்ளாகியிருக்கிறது.

"சீருடை அணிந்திருக்கும்போது ஒரு பெண் போலீஸ் நடனமாட எப்படி அனுமதிக்கலாம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் பா.ஜ.க.வின் ரிதேஷ் திவாரி.

"சீருடை அணிந்துகொண்டு நடனமாட விதிமுறைகள் அனுமதிக்காது" என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சவுத்ரி.

முன்னாள் கொல்கத்தா காவல் ஆணையர் நிருபம் சோம் கூறும்போது, நானாக இருந்தால் இதை அனுமதித்திருக்க மாட்டேன் என்றார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சந்தி முகர்ஜி கூறும்போது, 'இது அந்த நிமிட உந்துதலில் நடந்த ஒன்று. எனினும், இது நடைபெறாமல் இருந்திருக்கலாம்' என்றார்.

இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸிடம் இருந்து அதிகாரப் பூர்வமாக எந்த ஓர் அறிவிப்பும் வராத நிலையில், இந்தச் சம்பவம் முன்னேற்பாடின்றி திடீரென்று நடைபெற்ற ஒன்று; நிகழ்ச்சி தடைபெறக் கூடாது என்று அனுமதிக்கப்பட்டது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் நடிகை பிபாஷா பாசு, ஜீத் மற்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான தேவ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT