இந்தியா

மும்பையில் விளம்பர பலகை சரிந்து விபத்து: சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தகவல்

செய்திப்பிரிவு

மும்பை: மும்பையில் புழுதிப்புயல் தாக்கியதில் பிரம்மாண்ட விளம்பரப் பலகை சரிந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 14 பேர்உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 74 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று முன்தினம் மாலை திடீரென புழுதிப் புயல் வீசியது. அத்துடன் கனமழை பெய்தது. அப்போது மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் புழுதிப் புயல், மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மும்பை வந்துகொண்டிருந்த 15 விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன. நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமும் தடைபட்டது.

இதனிடையே, புயல் காரணமாக கட்கோபார் பகுதியில் இருந்த பிரம்மாண்ட விளம்பரப் பலகை சரிந்து, அருகில் இருந்த பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதனால் பெட்ரோல் பங்க் கூரையும் இடிந்து விழுந்தது. மழைக்காக அங்கு ஒதுங்கியிருந்த ஏராளமான வாகன ஓட்டிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 74 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலருக்குகை, தோள்பட்டை, முதுகுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்டல காவல்துறை உயர் அதிகாரி புருஷோத்தம் கராட் கூறும்போது, “பெட்ரோல் பங்க் மீது விளம்பரப் பலகை சரிந்துவிழுந்தது குறித்து ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 250 டன் எடை கொண்ட அந்த பலகை சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பலகைக்கு சொந்தமான ஈகோ மீடியா நிறுவனத்தின் இயக்குநர் பாவேஷ் பிந்தே உள்ளிட்டோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பாவேஷ் கடந்த 2009-ல் நடந்தபேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். அவர்தன் மீது 23 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த ஜனவரி மாதம் அவர் மீது முலுந்த் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT