காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு தேர்தல் முடிந்துவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் போட்டியிடுகிறார்.
வரும் 20-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள இந்த தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். 3 முறை எம்எல்சியாக பதவி வகித்த இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ரேபரேலியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
இக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். அப்போது, அக்கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் சிலர் திருமணம் எப்போது செய்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு, விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என ராகுல் பதில் அளித்தார்.
கடந்த ஆண்டு ஜெய்ப்பூர் மகாராணி கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது, அழகாக இருந்தும் நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என மாணவிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, கட்சிப் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.