பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள குருத்வாராவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உணவு சமைத்து பக்தர்களுக்கு பரிமாறினார்.
சாதி, சமய, இனம், மொழி, சமூக வேறுபாடுகளைக் களையும் வகையில் சீக்கிய குரு குருநானக், சமபந்தி விருந்து நடைமுறையை அறிமுகப்படுத்தினார். சீக்கியர்களின் 3-வது குரு அமர்தாஸ், அனைத்து குருத்வாராக்களிலும் இந்த நடைமுறையை அமல்படுத்தினார்.
இதன்படி சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராக்களில் பொது சமையல் அறை கூடம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். லங்கர்என்றழைக்கப்படும் இந்த கூடத்தில் சைவ உணவு வகைகளை தயாரிக்கவும் பரிமாறவும் தன்னார்வமுள்ள சீக்கிய ஆண், பெண் தொண்டர்கள் முன்வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிஹார் தலைநகர் பாட்னாவில் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்குள்ள குருத்வாராவுக்கு சென்றஅவர் உணவு சமைத்து பக்தர்களுக்கு பரிமாறினார். இந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. முன்னதாக பிஹார் மக்களவைத் தேர்தல் குறித்து பிரதமர் மோடி கூறும்போது, “கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த முறை 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
பாட்னா சாஹிப் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில்முன்னாள் மத்திய அமைச்சர்ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். அவர் கூறும்போது, “சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் நினைவாக கடந்த 18-ம் நூற்றாண்டில் பாட்னா சாஹிபில் குருத்வாரா கட்டப்பட்டது. இந்த குருத்வாராவில் வழிபாடு நடத்திய முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். குருத்வாராவில் அவர் ரொட்டி தயார் செய்து தனது கரங்களால் பக்தர்களுக்கு பரிமாறினார்’’ என்று தெரிவித்தார்.