இந்தியா

கேஜ்ரிவாலின் 10 வாக்குறுதிகள்: இலவச மின்சாரம் முதல் ஜிஎஸ்டி சீரமைப்பு வரை

செய்திப்பிரிவு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று முன்தினம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலை யொட்டி இப்போது 10 வாக்குறுதிகளை அளிக்கிறேன்.

200 யூனிட் இலவச மின்சாரம்: நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின் விநியோகம் வழங்கப்படும். ஆம் ஆத்மியின் ஆட்சியில் டெல்லி, பஞ்சாப் மின்மிகை மாநிலமாக மாறியிருக்கிறது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம். அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

அரசு பள்ளிகள் தரம் உயர்வு: டெல்லி, பஞ்சாபில் தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம்.

இலவச மருத்துவ சிகிச்சை: நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. மத்தியில் இண்டியா கூட்டணி அரசு பதவியேற்றால் அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும். நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்வோம்.

சீன ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: இந்தியாவின் நிலப்பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதை மத்திய அரசு மறுத்து வருகிறது. ஆக்கிரமிப்பு நிலங்களை சீனாவிடம் இருந்து மீட்போம்.

அக்னி பாதை திட்டம்: முப்படைகளில் பாஜக அரசு அமல்படுத்திய அக்னி பாதை திட்டம் நாட்டின் நலனுக்கு விரோதமானது. அதோடு இளைஞர்களின் நலன்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. எனவே முப்படைகளில் அமல் செய்யப்பட்டிருக்கும் அக்னி பாதை திட்டம் ரத்து செய்யப்படும்.

சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகள்: பாஜக ஆட்சியில் விவசாயிகளின் நலன் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தால் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகள் முழுமையாக அமல் செய்யப்படும். அந்த கமிட்டியின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுக்கிறது. மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை: பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் வேலை வாய்ப் பின்மை அதிகரித்து வருகிறது. நாங்கள் ஆட்சி அமைத்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழல் ஒழிப்பு: ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் இருந்து ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும்.

ஜிஎஸ்டி வரி சீரமைப்பு: ஜிஎஸ்டி வரிவிதிப்பு சீரமைக்கப்பட்டு, எளிமையாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT