அமராவதி/ புவனேஸ்வர்: ஆந்திரா, ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் இன்று நடைபெறுகிறது.
மக்களவை தேர்தலுடன் சேர்த்து, ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியிலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலும், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
இதேபோல, ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இங்கு, மொத்தம் 147 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மக்களவை தேர்தலுடன் சட்டப் பேரவை தேர்தலும் நடத்தப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.