இந்தியா

4 மாநில சட்டசபை தேர்தலில் மாயாவதி கட்சி தனித்து போட்டி: ஹரியாணா முதல்வர் வேட்பாளர் முன்னாள் காங். எம்.பி.

செய்திப்பிரிவு

ஹரியாணா, மகாராஷ்டிரா உட்பட 4 மாநில சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. தனது கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யை ஹரியாணா முதல்வர் வேட்பாளராகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 4 மாநில சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும். மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் (சரத் பவார்) எங்களது கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் மிஸ்ராவுடன் பேசி உள்ளார். ஆனால் தேசியவாத காங்கிரஸுடனோ, காங்கிரஸுடனோ கூட்டணி வைக்கப் போவதில்லை என அவரிடம் தெளிவாகக் கூறுமாறு மிஸ்ராவிடம் தெரிவித்துள்ளேன். 4 மாநில சட்டசபை தேர்தலிலும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை.

ஹரியாணா மாநில முதல்வர் பதவி வகித்தவர்களில் பெரும் பாலானவர்கள் ஜாட் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் மற்ற இனத்தவர்களின் நலனை புறக்கணித்து விட்டனர். எனவே, உயர் வகுப்பைச் சேர்ந்த அர்விந்த் சர்மாவை (காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர்) முதல்வர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வகுப்பினரின் நலனுக்காகவும் பாடுபடுவோம்.

வகுப்பு கலவரம்

நாட்டில் மதவாத சக்திகள் வலுவடைந்து வருகின்றன. இதனால் பல்வேறு மாநிலங்களில் வகுப்பு கலவரம் அதிகரித்துள்ளது. இதில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. அரசியல் சுயலாபத்துக்காக ஆளும் சமாஜ்வாதி கட்சியும் பாஜகவும் வகுப்பு கலவரங்களை தூண்டி விடுகின்றன என மாயாவதி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT