பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மஜத எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக பாஜக பிரமுகர் தேவராஜ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாயின.
பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டுபணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேவகவுடாவின் மூத்த மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா (66) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் இறங்கியுள்ளனர். இதனிடையே, அவரது ஆபாச வீடியோக்கள் வெளியானதன் பின்னணியில் பிரஜ்வலின் முன்னாள் கார் ஓட்டுநர் நவீன் கவுடா,கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஹொளேநர்சிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேவராஜ் கவுடா ஆகியோர் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
இதுகுறித்து தேவராஜ் கவுடா கூறும்போது, “கடந்த நவம்பரில் பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 2,976 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் எனக்குகிடைத்தது. அதனால் அவருக்கு ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் சீட் வழங்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினேன்'' என்று குறிப்பிட்டார்.
இதேபோல முன்னாள் கார்ஓட்டுநர் நவீன் கவுடா, “பிரஜ்வலின் வீடியோக்களை நான் தேவராஜ் கவுடாவிடம் மட்டுமே வழங்கினேன். காங்கிரஸாரிடமோ, போலீஸாரிடமோ வழங்கவில்லை. இந்த வீடியோ வெளியானதன் பின்னணியில் தேவராஜ் கவுடா இருக்கிறார்'' என குற்றம்சாட்டினார்.
இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேற்று சித்ரதுர்காவுக்கு காரில் சென்ற தேவராஜ் கவுடாவை வழிமறித்து கைது செய்தனர். அவர் மீது பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை பரப்பியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.