புதுடெல்லி: டெல்லியை வெள்ளி கிழமை புழுதிப் புயல் வாட்டி வதைத்த நிலையில், டெல்லி-என்சிஆர், உத்தராகண்ட், தமிழகம், ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது வானிலை சற்று மாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில்தான் டெல்லி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று புழுதிப் புயல் வீசியது. இந்த புழுதிப் புயல் காரணமாக டெல்லி மாநிலத்தன் பெரும்பாலான பகுதி பாதிப்புக்குள்ளானது.
இந்த நிலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தாக 152 அழைப்புகள் வந்துள்ளன. கட்டடங்கள் சேதமடைந்ததாக 55 அழைப்புகள் வந்துள்ளன. மின்சாரம் துண்டிப்பு தொடர்பாக 202 அழைப்புகள் வந்துள்ளன என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து 9 விமானங்கள் மாலை தாமதமாக திருப்பி விடப்பட்டன. சில விமானங்கள் விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன. பலத்த காற்று காரணமாக சாலைகளில் மரங்கள் விழுந்ததால், தலைநகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி-என்சிஆர், உத்தரகண்ட், தமிழகம், ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 24.9 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது பருவத்தின் சராசரியை விட 0.5 டிகிரி செல்சியஸ் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 11 முதல் 13 வரை இமாச்சலப் பிரதேசத்தின் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.