புதுடெல்லி: “நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகப் போவதில்லை என்பதை எழுத்துபூர்வமாகவே எழுதி தருகிறேன். நரேந்திர மோடி ஒரு ராஜா, அவர் ஒரு நாட்டின் பிரதமர் அல்ல” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியும் தவறு செய்திருக்கிறது, இதை காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே சொல்கிறேன். எதிர்காலத்தில் அதன் அரசியலை மாற்ற வேண்டும்.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகப் போவதில்லை என்பதை நீங்கள் விரும்பினால் எழுத்துபூர்வமாகவே எழுதித் தருகிறேன். நரேந்திர மோடி ஒரு ராஜா, அவர் ஒரு நாட்டின் பிரதமர் அல்ல. அமைச்சரவை, நாடாளுமன்றம் அல்லது அரசியலமைப்பு ஆகியவற்றுடன் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. மோடி, 21-ம் நூற்றாண்டின் ராஜா. நாட்டில் அதிகாரம், சக்தி பொருந்திய இரண்டு அல்லது மூன்று நிதியாளர்களுக்கு பின்புலமாக இருக்கிறார்.
மக்களவை தேர்தலில் பாஜக 180 இடங்களுக்கு மேல் வெல்லாது. இண்டியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிடுவோம். எனக்கு அதிகார அரசியலில் விருப்பமில்லை. என்னைப் பொறுத்தவரை அதிகாரம் என்பது பொதுமக்களுக்கு உதவும் ஒரு கருவி. நாட்டை பலப்படுத்த வேண்டும்” என்றார்.