இந்தியா

சமூக சேவகிக்கு எதிராக பலாத்கார மிரட்டல்: பேஸ்புக் கட்டுரையாளர் பெங்களூரில் கைது

செய்திப்பிரிவு

பெங்களூரைச் சேர்ந்த சமூக சேவகியை பொதுஇடத்தில் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று கட்டுரையாளர் ஒருவர் பேஸ்புக்கில் பதிவு செய்த ஆட்சேபகரமான கருத்துகள் அந்த நகரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை தலைமை யிடமாகக் கொண்டு பி.ஜி.வி.எஸ். என்ற தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இந்த அமைப்பு மூடநம்பிக்கைகளை ஒழிக்க நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை என். பிரபா இந்த அமைப்பின் கர்நாடக மாநிலச் செயலாளராக உள்ளார். அவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பேஸ்புக் போர்

அண்மையில் அவர் தனது பேஸ்புக் முகவரியில், மூடநம் பிக்கைகள் குறித்தும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சுட்டிக் காட்டியிருந்தார். இதற்குப் பதிலடியாக கர்நாடக நாளிதழ் களில் கட்டுரைகள் எழுதி வரும் வி.ஆர். பட் என்பவர் பிரபா குறித்து பேஸ்புக்கில் அவதூறான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

“பிரபா போன்ற பெண்களின் தலைமுடியை பிடித்து தெருவுக்கு இழுத்துவந்து பலாத்காரம் செய்ய வேண்டும்” என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கிவிட்டு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

முதல்வரிடம் முறையீடு

சமூகசேவகி பிரபா பெங்களூர் போலீஸில் புகார் அளித்தார். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வர் சித்தராமய்யாவை நேரில் சந்தித்து புகார் செய்தனர்.

முதல்வரின் உத்தரவின்பேரில் வி.ஆர். பட் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 504, 506, 153 (ஏ), 295 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த பெங்களூர் போலீஸார் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது?

தற்போது அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பெங்களூர் பெருநகர கூடுதல் கமிஷனர் அலோக் குமார் தெரிவித்தார்.

இதனிடையே ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கள் அமைப் புக்கும் வி.ஆர். பட்டுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று விளக்க மளித்துள்ளது.

3 ஆண்டு சிறை தண்டனை

பேஸ்புக் விவகாரம் குறித்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மெல்வின் கூறியதாவது:

“சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவு செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அந்த கருத்துகள் தனி நபரையோ, மதம் மற்றும் இனத்தையோ குறிப்பிட்டு காயப்படுத்துவதாக இருக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் வெளியிடுவது, மிரட்டுவது, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், தகவல் தொழில் நுட்ப சட்டம் 66ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். இது ஜாமீனில் வரக் கூடிய சட்டப்பிரிவு. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT