பாதுகாப்புப் படையினர் பயணம் மேற்கொண்ட வாகனம் 
இந்தியா

தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த விமானப்படை வீரர் வீரமரணம் @ ஜம்மு காஷ்மீர்

செய்திப்பிரிவு

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையின் இரு வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார்.

சனிக்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மூவர் நிலையாக இருப்பதாகவும். அவர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் விமானப்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து விமானப்படை வீரர்கள் குண்டடி பட்டனர்.

உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் விமானப்படை வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உள்ளூர் பாதுகாப்புப் படையினர் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பூஞ்ச் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT