இந்தியா

கலவரப் பகுதியை பார்வையிடச் சென்ற தருண் கோகாய் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்

செய்திப்பிரிவு

அஸ்ஸாம்- நாகாலாந்து எல்லைப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கலவரத்தில் பாதிப்புக்குள்ளான பகுதியை பார்வையிட சென்ற அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயின் பாதுகாவலர்களின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அஸ்ஸாம்- நாகாலாந்து எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியாக 6 நிலைகள் உள்ளன. இங்கு துணை ராணுவப்படை பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் கடந்த வாரம் 2 நாகாலாந்து சிறுவர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சென்றனர். எல்லையில் பாதுகாப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக துணை ராணுவத்தினர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் முற்றியதால், பொது மக்கள் மீது ராணுவத்தினர் தடியடி நடத்தினர். அதே நேரத்தில், அங்கு பதுங்கியிருந்த நாகாலாந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், வன்முறை ஏற்பட்டது. இதில் 7 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் வன்முறை ஏற்பட்டப் பகுதிகளில் அம்மாநில முதல்வர் தருண் கோகாய், இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது முதல்வர் கோகாயின் காருக்கு பின்னர் வந்த அவரது பாதுகாப்பு வாகனத்தின் மீது அங்கு கூடியிருந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் சம்பவ இடத்தில் பதற்றம் நிலவியது. தொடர்ந்து மக்கள் ஆர்பாட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு கூடியிருந்த மக்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டனர். அப்போது அங்கிருந்த சிலர் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதனை அடுத்து, அவர்களை கலக்க முயன்ற துணைப் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ட்சியடித்தும் நிலைமையை சற்றுக் கட்டுப்படுத்தினர்.

இதில் தருண் கோகாய்க்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும், 2 பாதுகாப்பு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அம்மாநில சட்டம் ஒழுங்கு ஆணையர் ரவூத் கூறினார்.

பின்னர், பதற்றம் தணிந்தவுடன் வன்முறை பகுதியை முதல்வர் தருண் கோகாய் பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT