கோப்புப்படம் 
இந்தியா

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உ.பி.யில் 13 எம்எல்ஏக்கள் போட்டி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இந்தமுறை மக்களவைத் தேர்தலில் உ.பி.யிலிருந்து இதுவரை 13 எம்எல்ஏக்கள் போட்டியிடுகின்றனர். வரும் நாட்களில் மேலும் சிலரது போட்டியால் பெரிய அளவில் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் எம்எல்ஏக்கள் போட்டியிட அதிக வாய்ப்பளிக்கும் கட்சியாக பாஜக உள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் உ.பி.யில் இது அதிகமாக உள்ளது. கடந்த 2014 தேர்தலில் பாஜக சார்பில் 14 எம்எல்ஏக்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தமுறை 2024 தேர்தலில் உ.பி.யிலிருந்து இதுவரை 13 எம்எல்ஏக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். உ.பி.யின் 2 மேலவை உறுப்பினர்களும் (எம்எல்சிக்கள்) மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 3 அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர். சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் ஜெய்வீர்சிங், மெயின்புரியில் சமாஜ்வாதி எம்.பி. டிம்பிள் யாதவுக்கு எதிராக போட்டியிடுகிறார். வருவாய்த் துறை இணை அமைச்சரான அனுப் பிரதான் வால்மீகி, ரிசர்வ் தொகுதியான ஹாத்ரஸில் போட்டியிடுகிறார். இவர் அருகிலுள்ள அலிகரின் கேர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

காஜியாபாத் நகர பாஜக எம்எல்ஏ அத்துல் கர்க் அதன் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடுகிறார். இதுபோல் பிஜ்னோர் ஊரக தொகுதி எம்எல்ஏ ஓம் குமார், அதன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். சமாஜ்வாதியின் ஐந்து எம்எல்ஏக்களும் இந்தமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதுபோல், பாஜக கூட்டணிக் கட்சிகளான நிஷாத் கட்சி மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் சார்பில் தலா ஓர் எல்எல்ஏ மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். எதிர்க்கட்சிகளில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஓர் எம்எல்ஏ போட்டியில் உள்ளனர்.

இவர்கள் தவிர, உ.பி. மேலவையின் இரண்டு எம்எல்சிக்களும் மக்களவைத் தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்களில் பாஜக சார்பில் ஜிதின் பிரசாதா, பிலிபித் தொகுதியிலும் பகுஜன் சமாஜ் சார்பில் பீமராவ் அம்பேத்கர், ஹர்தோய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதனால் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதில் வெற்றி பெறும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளுக்காக இடைத்தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT