நேரடியாகவும் மறைமுகமாகவும் இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
மத்திய பிரதேசத்தின் பிண்ட் நகரில் நேற்று காங்கிரஸ் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: இந்திய அரசமைப்பு சாசனம் என்பது வெறும் புத்தகம் கிடையாது. விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி, பட்டியலின மக்களுக்கு உரிமைகளை அளிக்கும் சாசனம் ஆகும். அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பு சாசனம் இந்திய மக்களின் ஆன்மாவாக விளங்குகிறது.
தற்போதைய மக்களவைத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து அரசமைப்பு சாசனத்தை அழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி,அமைச்சர் அமித் ஷா மற்றும்பாஜக தலைவர்கள் விரும்புகின்றனர்.
காங்கிரஸும் இண்டியா கூட்டணி கட்சிகளும் அரசமைப்பு சாசனத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறோம். இரு அணிகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
சுமார் 25 தொழிலதிபர்கள் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் ஆட்சி செய்ய பாஜகவிரும்புகிறது. தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால்விவசாயிகள், தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுக்கிறது.
ராணுவத்தில் அக்னி பாதை திட்டத்தை அமல்படுத்தியதால் ஏராளமான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக தீவிர முயற்சி செய்கிறது.
பணமதிப்பிழப்பு, தவறான முறையில் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. பணவீக்கமும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் இடங்கள் நிரப்பப்படும். நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்: ம.பி.யில் ராகுல் பேசிய அதே நாளில், விஜய்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராம்நிவாஸ் ராவத், ஷியோபூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது எம்எல்ஏ ராம்நிவாஸ் ராவத் இணைந்திருப்பது காங்கிரஸுக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது.