ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீமேதாரா மாவட்டத்தில் ஞாயிறு பின்னிரவில் சரக்கு வாகனம் ஒன்று லாரியுடன் மோதியதில் 3 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். கத்தியா கிராமம் அருகே இந்த சாலை விபத்து நடந்துள்ளது.இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சத்தீஸ்கரின் பீமேதாரா மாவட்டத்தில் சரக்கு வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக சரக்கு வாகனத்தில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அதனை முடித்துவிட்டு கத்தியா கிராமம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் வாகனம் மோதியது. இதில் சரக்கு வாகனத்தில் இருந்து 3 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.இந்த சாலை விபத்தால் அந்த மார்க்கத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.