இந்தியா

தெலங்கானாவில் 17 தொகுதிக்கு 893 பேர் வேட்பு மனு தாக்கல்

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 893 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தெலங்கானாவில் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக 17 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கிடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், கடந்த 18-ம்தேதி முதல் தொடங்கிய வேட்புமனுக்கள் தாக்கல் 25-ம் தேதி மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது. நேற்று பரிசீலனை நடைபெற்றது. இதில் 17 தொகுதிகளுக்கு மொத்தம் 893 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதிகபட்சமாக மல்காஜ்கிரி தொகுதிக்கு 114 பேரும், குறைந்தபட்சமாக ஆதிலாபாத் தொகுதிக்கு 23 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ஹைதராபாத் மக்களவை தொகுதிக்கு மொத்தம் 57 பேர் மனு தாக்கல் செய்தனர்.

நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது நாகர் கர்னூல் மக்களவை தொகுதிக்கு பிஎஸ்பி கட்சி சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் எம்.பி.யான மந்தா ஜெகன்நாத்தின் வேட்பு மனுவை பி-பாரம் இல்லாத காரணத்தினால் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார்.

தெலங்கானா மக்களவை தேர்தலில் சேவள்ளா தொகுதியில் பாஜக வேட்பாளர் கே. விஸ்வேஸ்வர் ரெட்டியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ. 4,568 கோடி. இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரஞ்சித் ரெட்டியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ. 435.33 கோடி. இதே தொகுதியின் பிஆர் எஸ் கட்சி வேட்பாளர் காசானி ஞானேஸ்வரின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.228.46 கோடி.

ஹைதராபாத் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளரான மாதவி லதாவின் சொத்து மதிப்பு ரூ.218.33 கோடி. இவர் அசாதுத்தீன் ஓவைஸியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

SCROLL FOR NEXT