ஜெயராஜன் 
இந்தியா

பாஜக தலைவர் ஜவடேகருடனான சந்திப்பை கம்யூ. தலைவர் ஜெயராஜன் தவிர்த்திருக்கலாம்: பினராயி விஜயன் கருத்து

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும் இருப்பவர் இ.பி. ஜெயராஜன். இந்நிலையில், ஜெயராஜன் குறித்து பாஜக சார்பில் ஆலப்புழாவில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரன் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தனக்கு மிரட்டல் இருப்பதாக ஜெயராஜன் கூறியதாகவும், அதனால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்வதற்காக அதன் மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் ஜெயராஜன் கூறியதாக ஷோபா சுரேந்திரன் தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை செலுத்திய பின்னர் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: பிரகாஷ் ஜவடேகருடனான சந்திப்பை ஜெயராஜன் தவிர்த்திருக்க வேண்டும். இதற்கு முன்புகூட பல முறை ஜெயராஜன் இதுபோன்ற சிக்கலில் சிக்கியிருக்கிறார். பிரகாஷ் ஜவடேகருடனான சந்திப்பை தவிர்த்திருந்தால் ஜெயராஜனுக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ஷோபா சுரேந்திரன் கூறியுள்ளது முழுக்க முழுக்க பொய் என்றும், பாஜகவில் சேரும் திட்டமில்லை என்றும் ஜெயராஜன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது, “திருவனந்தபுரத்தில் உள்ள எனது மகனின் வீட்டில் ஜவடேகரை நான் சந்தித்தது உண்மைதான். ஆனால் நாங்கள் அரசியல் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை. நான் அப்போது ஒரு கூட்டத்துக்குச் செல்ல இருப்பதாகவும், எனது மகனிடம் ஜவடேகருக்கு தேநீர் வழங்குமாறும் கூறிவிட்டு சென்றுவிட்டேன். இந்த விவரத்தை கட்சித் தலைமையிடம் நான் தெரிவிக்கவில்லை'' என்றார்.

SCROLL FOR NEXT