பெங்களூரு: இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி பெங்களூருவில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், ஜவஹல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், நடிகர்கள் சிவராஜ்குமார், ரமேஷ் அரவிந்த், உபேந்திரா, பிரகாஷ்ராஜ், கணேஷ், உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியும், அவரது மனைவியும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுதா மூர்த்தியும் ஜெயநகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு காலை 6.50 மணிக்கே வந்து, முதல் ஆளாக வாக்களித்தனர்.
பின்னர் சுதா மூர்த்தி கூறுகையில், “எனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தேர்தலில் வாக்களிக்க அவரை காலையில்தான் டிஸ்சார்ஜ் செய்தோம். இங்கு வந்து வாக்களித்தபிறகுதான் அவரை நாங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். எனக்கும் உடல் அசதி இருந்தது. எனினும் முதல் ஆளாக காலையில் வந்து வாக்களித்துள்ளேன். எங்களைப் போன்ற மூத்த குடிமக்களே வரிசையில் நின்று வாக்களிக்கும்போது, இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து கட்டாயம் வாக்களிக்க வேண்டும்” என்றார்.