புதுடெல்லி: எதிர்க்கட்சியினரை நாகரிகமின்றி தாக்கி பேசும் அரசியல்வாதிகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும், கட்சி தாவல் தடை சட்டத்தை வலுப்படுத்த வேண்டும், இலவசங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை முன்னாள்துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பத்ம விபூஷண் விருது பெற்றதையடுத்து தனது இல்லத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி விட்டு கட்சி தாவுகின்றனர். காலையில் ஒரு கட்சி மாலையில் வேறொரு கட்சி என்பதுதான் சமீபத்திய போக்காக உள்ளது. கட்சி தாவியதுமே இத்தனை நாட்கள் ஆதரித்து வந்த தலைவரை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள்.இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் சிலருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் பரிசாக அளிக்கப்படுகிறது.
பொது வாழ்க்கையின் தரம் நாளுக்கு நாள் இவ்வாறு குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. இத்தகைய போக்கை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும். கட்சி மாற நினைப்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அடுத்தகட்சியில் சேர வேண்டும். கட்சிகளுக்காக கடுமையாக உழைத்து தங்களது நேர்மைத்தன்மையை அரசியல்வாதிகள் நிரூபிக்க வேண்டும்.
அடுத்து, இலவசங்களுக்கு நான் எதிரானவன். கல்வி மற்றும் சுகாதாரம் இவ்விரண்டை மட்டுமே இலவசமாக வழங்கிட ஆதரவு அளிப்பேன். இலவச வாக்குறுதிகள் நிராகரிக்கப்பட வேண்டும்.
குற்றம்சாட்டுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இங்கு குற்றம் சாட்டப்படுவதற்கு பதில் மோசமான வார்த்தைகளில் திட்டுகிறார்கள். பிறரை தாக்கி பேசுவதற்கு பதில் மாற்று கொள்கைகளை கட்சிகள் முன்வைத்து பேசப் பழக வேண்டும்.
ஒருவரை ஒருவர் தாக்கி, நாகரிகமற்ற கொச்சையான சொற்களில் பேசும் அரசியல்வாதிகளை மக்கள் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். ஊழல்வாதிகளையும் மக்கள் கட்டாயம் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.