புதுடெல்லி: மத்திய அரசு ரயில்வே துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் நவீன தரத்திலான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதுபோல அதிவேக புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறுகையில், “புல்லட் ரயிலை அறிமுகம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரையில் 290 கி.மீ. தொலைவுக்கு கட்டமைப்பு பணிகள் முடிந்துள்ளன. 8 ஆறுகள் மீது பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 ரயில் நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2026-ம் ஆண்டுக்குள் முதற்கட்ட பணிகளை முடித்து புல்லட் ரயிலை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்” என்றார்.