இந்தியா

“போட்டியிடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் பாஜகவில் இணைவேன்” - கேஎஸ் ஈஸ்வரப்பா

செய்திப்பிரிவு

பெங்களூரு: “கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி கவலையில்லை. நான் தேர்தலை எதிர்கொள்வேன். வெற்றி பெறுவேன். பாஜகவில் மீண்டும் இணைவேன். தாமரை சின்னத்தில் வென்று ஐந்து முறை நான் மக்கள் பிரதிநிதியாக இருத்துள்ளேன்” என்று ஈஸ்வரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜக மேலிடம் சீட் வழங்காததால் கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சுயேச்சையாக போட்டியிடக் காரணம் என்ன? மக்களவைத் தேர்தலில் தனக்கு ஷிமோகா தொகுதியிலும் தன் மகன் காந்தேஷுக்கு ஹாவேரி தொகுதியிலும் அவர் சீட் கேட்டார். ஆனால், பாஜக மேலிடம் சீட் வழங்கவில்லை. ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கும், ஹாவேரியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் சீட் வழங்கியது.

இதனால் கோபமடைந்த ஈஸ்வரப்பா, ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குவதாக அறிவித்தார். இதையடுத்து அமித் ஷா அவரிடம் பேசி, முடிவை கைவிடுமாறு கோரினார். அதற்கு ஈஸ்வரப்பா, ''கர்நாடக பாஜக எடியூரப்பா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அவரது இளையமகன் விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். இதனை அமித் ஷா ஏற்க மறுத்தார்.

இதையடுத்து ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இது குறித்து செய்தியாளார்களிடம் பேசிய அவர், “கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி கவலையில்லை. நான் தேர்தலை எதிர்கொள்வேன். வெற்றி பெறுவேன். பாஜகவில் மீண்டும் இணைவேன். தாமரை சின்னத்தில் வென்று ஐந்து முறை நான் மக்கள் பிரதிநிதியாக இருத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாஜகவை வளர்த்தெடுத்தவர்களில் எடியூரப்பா, எச்.என்.அனந்த் குமார் ஆகியோருடன் ஈஸ்வரப்பாவும் முக்கிய நபராக அறியப்படுகிறார். கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றிற்கு 2 கட்டங்களாக ஏப்ரல் 26 மற்றும் மே 7 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஈஸ்வரப்பா போட்டியிடும் ஷிமோகா தொகுதி மே 7ல் தேர்தலை சந்திக்கிறது. அதற்கான வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் நிறைவடைந்தது. அதுவரை ஈஸ்வரப்பாவுக்கு அவகாசம் வழங்கியிருந்த பாஜக அவர் வேட்புமனுவை திரும்பப் பெறாத நிலையில் அவரைக் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT