ஹிமாங்கி சகி 
இந்தியா

வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வேட்பாளரை வாபஸ் பெற்றது இந்து மகா சபை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யின் 80 தொகுதிகளில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடைசி கட்டமாக நடைபெறும் தேர்தலில் பிரதமர் மோடியின் வாராணசி தொகுதியும் இடம்பெற்றுள்ளது.

இங்கு 2014 முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இந்து மகா சபை சார்பில் திருநங்கையான ஹிமாங்கி சகி மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது இவர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

அயோத்தி பாபர் மசூதி - ராமர் கோயில் வழக்கில் இந்து மகா சபையும் ஒரு மனுதாரராக இருந்தது. இதில் இந்துக்களுக்கு சாதகமான தீர்ப்புக்கு பிறகு அறக்கட்டளை ஏற்படுத்தி, அங்கு ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்த அறக்கட்டளையில் இந்துமகா சபையினர் சேர்க்கப்படவில்லை. மேலும் கடந்த ஜனவரி 22-ல் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ராமர் கோயில் விழாவிலும் இவர்கள் அழைக்கப்படவில்லை. இதனால் கோபம் கொண்டு இந்த தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்க்க இந்து மகா சபை முடிவு செய்தது.

இதற்காக நிர்மோஹி அகாடாவை சேர்ந்த திருநங்கையான ஹிமாங்கி சகியை தங்கள் வேட்பாளராக நிறுத்தியது. நாடுமுழுவதிலும் உள்ள திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்க தாம் இங்கு போட்டியிடுவதாக ஹிமாங்கி சகி அறிவித்தார்.

தற்போது மனம் மாறிய இந்துமகா சபை அமைப்பினர், எந்தநிபந்தனையும் இன்றி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். பிரதமர் மோடியை போட்டியின்றி தேர்ந்தெடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்து மகா சபை தலைவர் சுவாமி சக்ரபாணி மஹராஜ் கூறும்போது, “அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததுடன் ராமர் கோயிலையும் பிரதமர் மோடி கட்டியுள்ளார். எனவே, மாறுபட்ட கொள்கை கொண்டிருந்தாலும் அவரை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டும்.

பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் போட்டியிட்டபோது, முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றன. இதுபோன்ற ஜனநாயக முறை மீண்டும் தழைக்க வேண்டும்” என்றார்.

கடந்த 1991-ல் பிரதமராக நரசிம்ம ராவ் பதவியேற்றபோது, அவர் எம்.பி.யாக இல்லை. இதனால் ஆந்திராவின் நந்தியால் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு எதிரான வேட்பாளரை என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம் வாபஸ் பெற்றது. மேலும் 5 சுயேச்சைகளும் வாபஸ் பெற்றனர். இதனால் 5.80 லட்சம் வாக்குபெற்று நரசிம்ம ராவ் வெற்றி பெற்றார். அப்போது இது, கின்னஸ் சாதனையாகவும் பதிவாகியது.

SCROLL FOR NEXT