இந்தியா

இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா: அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி

செய்திப்பிரிவு

இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டுவதற் காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மாநிலங்களவையில் செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

இந்த மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார்.

இதில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அதே இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா தான் இப்போது கொண்டு வரப்படு கிறது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த மசோதாவை தேர்வு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதனை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்க மறுத்துவிட்டார். இதுதொடர்பாக கூட்டத்தில் அவர் பேசியபோது, ‘இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளியுங்கள் அல்லது எதிர்த்து வாக்களியுங்கள். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் அரசியல் நடத்த வேண்டாம்’ என்று கண்டிப்புடன் கூறினார்.

பிஜு ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. அந்தக் கட்சிகளுக்கு முறையே 7 மற்றும் 6 உறுப்பினர்கள் உள்ளனர்.

மொத்தம் 250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 64 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 69 உறுப்பினர்கள் உள்ளனர். தேர்வு கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று கோரும் கட்சிகளின் மொத்த பலம் 136 ஆக உள்ளது.

எனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது: அந்நிய முதலீட்டை ஈர்க்க காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. இதே மசோதாவை 2008-ல் காங்கிரஸ் கொண்டு வந்தபோது பாஜக எதிர்த்தது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். ஆனால் அதற்கு முன்பாக மசோதாவில் சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT