புதுடெல்லி: முதல் கணவர் வழக்கு தொடர்ந்ததால், இந்தியாவைச் சேர்ந்த காதலருடன் வசிக்கும் பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் நேரில் ஆஜராக நொய்டா குடும்ப நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த பெண் சீமா ஹைதர். இவரது கணவர் குலாம் ஹைதர்சவுதி அரேபியாவில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செல்போனில் பப்ஜி விளையாடியபோது, இந்தியாவைச் சேர்ந்தசச்சின் மீனா என்ற இளைஞருடன் சீமா ஹைதருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் பேசி காதலித்துள்ளனர்.
சீமா ஹைதர் தனது குழந்தைகளுடன் சச்சின் மீனாவுடன் வாழ முடிவு செய்தார். இதையடுத்து சீமா ஹைதர், தனது குழந்தைகளுடன் கடந்தாண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்து அதன்பின் நேபாளம் வந்துள்ளார். சச்சின் மீனாவும் அவரை சந்திக்க நேபாளம் சென்றுள்ளார். காத்மாண்டுவில் உள்ள இந்து கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
திருமணம் செல்லாது: அதன்பின் அங்கிருந்து சட்டவிரோதமாக சீமா ஹைதர் இந்தியாவுக்குள் நுழைந்து நொய்டாவில் சச்சின் மீனாவுடன் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறார். இருவரும் கடந்த மாதம் தங்கள் முதல் திருமண விழாவை கொண்டாடினர்.
இந்நிலையில் சீமாவின் கணவர் குலாம் ஹைதர், இந்திய வழக்கறிஞர் அலி மொமின் என்பவர் மூலம் நொய்டா குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சீமா தனது கணவர் குலாம் ஹைதரை விவாகரத்து செய்யவில்லை. அதனால் சச்சின் மீனாவை சீமா திருமணம் செய்து கொண்டது செல்லாது என கூறியுள்ளார்.
சர்வதேச சட்டப்படி, சீமாவின் 4 மைனர் குழந்தைகள் மதம் மாற தடை உள்ளது என பாகிஸ்தான் வழக்கறிஞர் அன்சார் பர்னே என்பவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சீமா ஹைதர் மே 27-ம் தேதி நேரில் ஆஜராக நொய்டா குடும்ப நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.