புதுடெல்லி: பதஞ்சலி தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, யோககுரு பாபா ராம்தேவும் பாலகிருஷ்ணாவும் பொது மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அலோபதி மருத்துவத்தின் தரத்தை சீர்குலைக்கும் வகையில்பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டதாக கூறி இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பதஞ்சலி நிறுவனத்தின் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை வேண்டுமென்றே மதிக்கவில்லை என்று கூறி ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தவறான விளம்பரத்தை வெளியிட்டதற்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்றும் ராம்தேவ் உறுதியளித்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றத்தை பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் ஒப்புக்கொண்டனர். தங்கள் செயல்களுக்கு பகிரங்க மன்னிப்பு கோருவது உட்பட தாமாக முன்வந்து சில திருத்தங்களை செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் அவர்கள் கோரினர்.
தரம் தாழ்த்தக் கூடாது: இதற்கு, பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள். ஆனால் அலோபதி மருத்துவத்தை தரம் தாழ்த்துவதை ஏற்க முடியாது. நாங்கள் முந்தைய உத்தரவில் என்ன சொன்னோம் என்று தெரியாத அளவுக்கு நீங்கள் அப்பாவிகள் இல்லை’’ என்றனர்.
இதையடுத்து, ராம்தேவ், பாலகிருஷ்ணா, பதஞ்சலி நிறுவனம் சார்பில் விளம்பர வழக்கு தொடர்பாக பொது மன்னிப்பு கோரி பகிரங்க அறிக்கை வெளியிட ஒருவார கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ராம்தேவ் தரப்பு வழக்கறிஞரிடம், “இந்த விவகாரத்தில் இதோடு நாங்கள் அவர்களை விட்டுவிடுகிறோம் என்று கூறவில்லை’’ என நீதிபதி கள் தெரிவித்தனர்.
ஏமாற்று விளம்பரங்களால் தயாரிப்புகளை வாங்கி பாதிக்கப்படும்சாமானிய மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில்தான் எங்களுக்கு முதன்மையான அக்கறை. யாரையும் தனிமைப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. சட்டத்தை மீறுவது அனுமதிக்கப்படாது என்ற செய்தியை தெளிவுபடுத்துவதே இந்த விவகாரத்தில் எங்களின் நோக்கம் என்று உச்சநீதிமன்றம் நேற்று தெளிவுபடுத்தியது.