கோப்புப்படம் 
இந்தியா

பாஜக ஆளும் உ.பி.யில் பல ஆண்டுகளாக முடங்கியிருக்கும் திருவள்ளுவர் சிலை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பாஜக தனது தேர்தல் அறிக்கையில் திருவள்ளுவர் பெயரில் சர்வதேச கலாச்சார மையங்கள் திறக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், பாஜக ஆளும் உ.பி.யில் திருவள்ளுவர் சிலை திறக்கும் கோரிக்கை 33 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் மண்ணுக்கு அடியில் ஓடுவதாக கருதப்படும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது. இங்கு புனித நீராட நாள்தோறும் தமிழர்கள் ஏராளமானோர் வருகின் றனர். எனவே இதன் தென்கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்க உ.பி.யின் இந்தி அறிஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இவர்கள், உ.பி.யில் மொழிகளை இணைக்க அமைந்த ‘பாஷா சங்கம்’ எனும் சமூக சேவை அமைப்பை சேர்ந்தவர்கள். பெரும்பாலும் வட மாநிலத்தவர்களை கொண்ட இந்த அமைப்பு, அலகாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு 1976 முதல் செயல்படுகிறது.

7 ஆண்டுகளாக... இதன் சார்பில் அலகாபாத் சங்கமத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயர் வைத்து அங்கு அவரது சிலையும் அமைக்ககடந்த 1990 முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் 7 ஆண்டுகளாக வெளியாகி வருகிறது.

உ.பி.யில் அகிலேஷ் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சியில், பாஷா சங்கத்தின் கோரிக்கை அலகாபாத் மாநகராட்சியால் கடந்த 2017, ஜூன் 24-ல் ஏற்கப்பட்டது. இதன் உத்தரவின்படி, கடந்த 2017, ஜூலை 10-ல் தென்கரை சாலைக்கு ‘தமிழ்கே சந்த் கவி திருவள்ளுவர் மார்க்’ (தமிழ் ஐயன் திருவள்ளுவர் சாலை) எனப் பெயரிடப்பட்டது.

ஆனால், திருவள்ளுவருக்கு சிலை வைக்கும் பணி முடிப்பதற்குள் உ.பி.யில் புதிதாக அமைந்த பாஜக ஆட்சியில் சிலை திறப்புக்கு தடை ஏற்பட்டது.

இது பற்றி ‘தி இந்து’விடம் பாஷா சங்கத்தின் பொருளாளர் சந்திர மோகன் பார்கவா கூறும்போது, “அப்போதைய முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் உத்தரவின் பேரில் அலகாபாத் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. சாலைக்கு திருவள்ளுவர் பெயர் வைத்த பிறகு அந்த இடம் தனது கட்டுப்பாட்டுக்குள் வருவதாகக் கூறி அலகாபாத் வளர்ச்சி ஆணையம் சிலை வைக்க தடை விதித்துள்ளது.

பிறகு அமைந்த பாஜகஆட்சியில் அனுமதிக்காக முதல்வரை சந்திக்கவும் முடியாத நிலை உள்ளது” என்று தெரிவித்தார்.

இது குறித்து பாஷா சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் முனைவர்.எம்.கோவிந்தராஜன் கூறும்போது, “சங்கமம் அருகே ‘அரைன் காட்’ எனும் இடத்தில் உள்ள சச்சா பாபா ஆசிரமத்தின் உள்ளே திருவள்ளுவர் சிலை வைத்துக்கொள்ள அதன் தலைவர்சுவாமி கோவிந்த தாஸ் முன்வந்தார்.

இதனால் திருவள்ளுவரை குறிப்பிட்ட சமயத்துடன் தொடர்புபடுத்தும் வாய்ப்பு இருப்பதால் அதற்கு மறுத்துவிட்டோம். எங்களுக்காக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குரல் கொடுத்தும் சிலை அமையாமல் உள்ளது” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT