புதிய திருமணச் சட்டத்தின் கீழ் தங்களின் திருமணத்தைப் பதிவுசெய்ய விரும்பும் தம்பதிகள் இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதை திருமணமான நாளிலிருந்து 60 நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாத மத்தியில் திருமணப் பதிவுக்கான புதிய வலைதளத்தை டெல்லி வருவாய்த்துறை தொடங்க இருக்கிறது. ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதைப் போலவே தங்களின் திருமணத்தையும் பதிவு செய்யலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் அதற்குரிய ஆவணங்களையும் அளித்துவிட வேண்டும். பின்னர் தம்பதிகளுக்கு குறிப்பிட்ட நாள் ஒதுக்கப்படும். அப்போது பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து அங்கு மீதமுள்ள நடைமுறைகளை முடித்துக்கொண்டு திருமணம் பதிவு செய்ததற்கான சான்றிதழை வாங்கிச் செல்லலாம்.
இணைய வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் அந்தந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இணைய கியாஸ்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பதிவேற்றிய பிறகு தம்பதிகளுக்கு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகள் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் விண்ணப்பங்களை இந்த வலைதளம் நிராகரித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.