இந்தியா

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் கவிதாவை கைது செய்ததாக சிபிஐ அறிவிப்பு

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவை, இதே வழக்கில் கைது செய்ததாக சிபிஐ நேற்று அறிவித்தது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி கைது செய்து டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதன் பின்னர் அவரை அமலாக்கத்துறையினர் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகளும் இவ்வழக்கை விசாரித்து வருவதால், அவர்களும் கடந்த 6-ம் தேதி திஹார் சிறையில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர். இதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியதால், ஒரு பெண் காவலர் மற்றும் கவிதாவின் வழக்கறிஞர் முன்னிலையில் திஹார் சிறையிலேயே கவிதாவை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதம் ஆனதால், நேற்று கவிதாவை கைது செய்து தங்களின் காவலில் எடுத்துள்ளதாகவும், அவரை தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜர் படுத்தப்போவதாகவும் சிபிஐ நேற்று அறிவித்தது.

SCROLL FOR NEXT