துர்க்: சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேர், பேருந்து ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பினர். கப்ரி என்ற பகுதியில் கும்ஹரி என்ற இடம் அருகே பேருந்து வந்த போது, அது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ரிச்சா பிரகாஷ் சவுத்திரி கூறுகையில், ‘காயம் அடைந்தவர்களில் 12 பேர்ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’’ என்றார்.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரவுபதிமுர்மு எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘சத்தீஸ்கரில் நடைபெற்ற விபத்து மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனதுஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘சத்தீஸ்கர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவியை அளித்து வருகிறது’’என்றார்.