காங்கிரஸ் 
இந்தியா

கர்நாடகா | பாஜக வெற்றியைத் தடுக்க‌ 10 அமைச்சர்களின் குடும்பத்தினரை களமிறக்கிய காங்கிரஸ்

இரா.வினோத்

பெங்களூரு: வருகிற மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவின் தொடர் வெற்றியை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி, அம்மாநில அமைச்சரவையில் உள்ள 10 பேரின் குடும்பத்தினரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இதற்கு இணையாக பாஜகவும், மஜதவும் குடும்பத்தினரை வேட்பாளர்களாக நிறுத்தி இருந்தாலும், காங்கிரஸை குடும்ப அரசியல் செய்வதாக விமர்சித்துள்ளனர்.

வாரிசுகளுக்கு முன்னுரிமை: கர்நாடகாவில் உள்ள‌ 28 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிற‌து. கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து நடந்த அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும் கர்நாடகாவில் பாஜகவே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இந்த முறை பாஜக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜதவுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகிறது. எனவே 28 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என அக்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் தொடர் வெற்றியை தடுப்பதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.

அதன்படி, வேட்பாளர் தேர்வில் கர்நாடக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பிள்ளைகள், சகோதரர், மனைவி, மைத்துனர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பெரும்பாலான வேட்பாளர்களும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வேட்பாளர்களின் வெற்றிக்காக அவர்களின் குடும்பத்தினரே சுற்றி சுழன்று தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

முதல் முறையாக களமிறங்கிய வாரிசுகள்: போக்குவரத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா ஜார்கிஹோளி சிக்கோடி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். ஜவுளித்துறை அமைச்சர் சிவானந்த் பட்டீலின் மகள் சம்யுக்தா பட்டீல் பாகல்கோட்டை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பாவின் மகன் சுனில் போஸ் சாம்ராஜ்நகரில் போட்டியிடுகிறார். வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரேவின் மகன் சாகர் காண்ட்ரே பிதரில் நிறுத்தப்பட்டுள்ளார். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பல்கரின் மகன் மிர்னால் ரவீந்திரா ஹெப்பல்கர் பெலகாவியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த 6 வாரிசுகளும் முதல் முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இவர்களுக்காக அவர்களின் தந்தையே களத்தில் முன்னின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்தினருக்கு முன்னுரிமை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் பெங்களூரு ஊரக தொகுதியில் மீண்டும் களமிறக்க‌ப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பாவின் சகோதரி கீதா (நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி) ஷிமோகாவில் நிறுத்தப்பட்டுள்ளார்.

கனிம வள‌த்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனின் மனைவி பிரபா மல்லிகார்ஜுன் தாவணகெரே தொகுதியில் போட்டியிடுகிறார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவின் மைத்துனர் ராதாகிருஷ்ணா தொட்டமணி குல்பர்காவில் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த தொகுதியான இதில், இந்த தேர்தலில் அவரது மருமகன் களமிறக்கப்பட்டுள்ளதால், கார்கேவின் ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுளனர்.

குடும்ப அரசியல் விமர்சனம்: காங்கிரஸில் அமைச்சர்களின் குடும்பத்தினர் 10 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்துவருவது மீண்டும் நிரூபணம் ஆகி இருப்பதாக கூறியுள்ளனர்.

அதேவேளையில் பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஷிமோகாவிலும், மஜத சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி மண்டியாவிலும், பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசனிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குடும்ப அரசியல் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT