வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைப்பேன் என்பதுதான் பிரதமர் மோடியின் உத்தரவாதம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் பாஜக சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஊழலை எதிர்த்து போரிடுவேன் என நான் கூறி வரும் நிலையில், ஊழல்வாதிகளை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்றார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பாங்குரா நகரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கட்சித் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக மேற்கு வங்கத்துக்கு வருகிறார்.
இதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு (ஜூன் 4) ஊழலில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறிய முறை ஏற்கத்தக்கதல்ல. ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பேசலாமா?
தேர்தலுக்குப் பிறகு பாஜகவினரை சிறையில் அடைப்பேன் என நான் கூறினால் என்ன ஆகும்? ஆனால், இது ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கதல்ல என்பதால் நான் அப்படி சொல்லமாட்டேன். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சிறையில் அடைப்பேன் என கூறுவதுதான் பிரதமர் மோடியின் உத்தரவாதம்.
புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் காவல் துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அம்மாவட்டத்துக்குள் நுழைந்தது தவறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்வதற்காக என்ஐஏ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை மேதினிபூர் மாவட்டத்துக்கு சென்றனர். அப்போது அவர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் அரசியல் ரீதியாக விவாதத்தை கிளப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.