அமராவதி: ஆந்திர மாநிலத்தில் மே மாதம் 13-ம் தேதி, 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதி களுக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இம்முறை தெலுங்கு தேசம் கட்சியுடன், பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணியில் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இதில், பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளை கேட்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள் என்ன? அனைத்து துறையிலும் தேவையான வளர்ச்சி பணிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டியும், மக்களையும் தேர்தல் வாக்குறுதியில் பங்கேற்க செய்யும்படியான ஒரு புதிய சிந்தனையை இந்த கூட்டணி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக ’மக்கள் தேர்தல் அறிக்கை’ எனும் பெயரில் 83411 30393 என்கிற எண்ணுக்கு குறுந்தகவலோ அல்லது வாட்ஸ் ஆப் செயலியில் இதே எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் மக்கள்ஆலோசனைகளை வழங்க இக்கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.