ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) சார்பில் அதன் தலைவர் குலாம் நபி ஆசாத் போட்டியிடுகிறார். மேலும், ஸ்ரீநகர் தொகுதியில் இருந்து வஹீத் பாரா, பாரமுல்லாவில் இருந்து பயாஸ் மிர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், உதம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக பிடிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனந்த்நாக் தொகுதியில் 2004 மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர் முப்தி. ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதே தனது தலையாய கடமை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ நாம் மாநில அந்தஸ்து இல்லாமல் யூனியன் பிரதேசமாக இருப்பது மிகப்பெரிய பிரச்சினை. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து மாநிலங்களவையில் முதல் குரல் எழுப்பினேன். தற்போது மக்களவையிலும் போராட விரும்புகிறேன்.
அதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்களவையில் எனது முதல் போராட்டம் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காகவே இருக்கும் என்றார்.